கோட்டாபய மீதான வழக்கு: சாட்சிவிசாரணை ஒத்திவைப்பு

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு எதிரான வழக்கின் சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 19-06-2019 | 1:33 PM
Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஸவுக்கு எதிராக, மூவரடங்கிய விசேட ​மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சி விசாரணை அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ கடந்த மே மாதம் 31 ஆம் திகதி சிங்கப்பூரில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதுடன், கடந்த 9ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கோட்டாபய ராஜபக்ஸவை 6 வாரங்களுக்கு ஓய்வில் இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரியுள்ளார். இதற்கிணங்க, சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை ஒத்திவைத்த விசேட மேல் நீதிமன்றம், கோட்டாபய ராஜபக்ஸவுக்கு வௌிநாடு செல்வதற்காக வழங்கப்பட்ட காலஅவகாசத்தை அடுத்த மாதம் 24 ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது. 4 சாட்சியாளர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், எதிர்வரும் 26 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வழக்கின் ஒன்பதாவது சாட்சியாளரை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்க மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை அமைக்கும்பொழுது அரசாங்கத்துக்கு சொந்தமான 3 கோடியே 39 இலட்சம் ரூபாவுக்கு அதிக பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவின் வைத்திய அறிக்கை பிரத்தியேக அறிக்கை என்பதால் அதனை நீதிமன்ற பதிவாளரின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நீதமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ​கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.