இந்த வருட தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவிழப்பு

இந்த வருட தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவிழப்பு

இந்த வருட தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை வலுவிழப்பு

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2019 | 8:29 am

Colombo (News 1st) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி காலநிலை வலுவிழந்து காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்து பசுபிக் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மே மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரை நிலவும் எனவும் ஏனைய வருடங்களில் தென்மேற்கு பருவ காலநிலையில் மாற்றம் ஏற்படும் எனவும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரம் மற்றும் பசுபிக் கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பே இந்த நிலைக்குக் காரணம் எனவும் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சியின் போதும் குறைந்தளவு மழைவீழ்ச்சியையே எதிர்பார்க்க முடியும் என வளிமண்டலவியல் திணைக்கம் குறிப்பிட்டுள்ளது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலையின் போது வௌ்ளநிலை ஏற்பட்டமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இந்த வருடம் பல பகுதிகளில் வறட்சி நிலவி வருவதாக அதுல கருணநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வங்காள விரிகுடாவில் உருவாகும் காலநிலை மாற்றத்தைப் பொறுத்தே எதிர்வரும் மாதங்களில் மழைவீழ்ச்சியின் தாக்கம் அமையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கம், காற்றின் வேக அதிகரிப்பு போன்றவையே இந்த காலநிலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்