பொலிஸ் அதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய இளைஞருக்கு பிணை

ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் வழங்கிய இளைஞருக்கு பிணை

by Staff Writer 18-06-2019 | 2:05 PM
Colombo (News 1st) திருகோணமலை - ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரண்டரை இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்கியபோது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜரத்ன முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, பிணை வழங்கப்பட்டுள்ளது. 15,000 ரூபா ரொக்கப்பிணையிலும் தலா 4 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் சந்தேகநபர் செல்வதற்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் நிறைவுபெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினர் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் சந்தேகநபருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. முஸ்லிம் பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் மாமாவிற்கு பிணை வழங்குவதற்காக உதவி செய்யுமாறு கூறி குறித்த இளைஞன் ஹொரவபொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 5 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்குவதாக கூறியுள்ளார். அதில் இரண்டரை இலட்சம் ரூபா இலஞ்சத்தை வழங்கும்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.