by Staff Writer 18-06-2019 | 2:12 PM
Colombo (News 1st) வடக்கு மார்க்கத்திலான 4 ரயில் சேவைகளை நாளை மறுதினம் (20ஆம் திகதி) இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் பொல்கஹவெலயில் இருந்து பொத்துஹெர வரையிலான மார்க்கத்தில் இடம்பெறவுள்ள மார்க்க புனரமைப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிணங்க, மீனகயா கடுகதி ரயில், தலைமன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கான இரவு நேர தபால் ரயில்கள் என்பனவும் இரத்து செய்யப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பொல்கஹவெலயில் இருந்து மஹவ சந்தி வரையில் சேவையில் ஈடுபடும் ரயில், கொழும்பு - கோட்டை முதல் கனேவத்தை மற்றும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு - கோட்டை வரை சேவையில் ஈடுபடும் கடுகதி ரயில்கள் மாத்திரம் நாளை மறுதினம் வடக்கு ரயில் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இதனிடையே, எதிர்வரும் 21ஆம் திகதி கனேவத்தயில் இருந்து கொழும்பு - கோட்டை வரை சேவையில் ஈடுபடும் ரயில் ஒரு மணித்தியாலம் தாமதாக பயணத்தை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.