கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சேபனை மனுக்கள் நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சேபனை மனுக்கள் இரண்டு நிராகரிப்பு

by Staff Writer 18-06-2019 | 4:14 PM
Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (18ஆம் திகதி) நிராகரித்துள்ளது. மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு 3 கோடியே 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் விசேட மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஆட்சேபனைக்கு உட்படுத்தி கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவே இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆட்சேபனை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை இரண்டையும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. விசேட மேல்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரணைக்கு எடுப்பதற்கு எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதற்கமைய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பில், கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு, நாளை முதல் திட்டமிடப்பட்டுள்ளவாறு விசேட மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.