கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி உண்ணாவிரதப் போராட்டம்

by Staff Writer 18-06-2019 | 2:36 PM
Colombo (News 1st) அம்பாறை - கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக்கோரி ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்று (18ஆம் திகதி) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. கல்முனை வடக்கு பிரதேச செலயகத்திற்கு முன்பாக நேற்று காலை இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை தங்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உண்ணாவிரதத்திற்கு வலுசேர்க்கும் வகையில் மட்டக்களப்பிலும் இரண்டாவது நாளாகவும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கான கோரிக்கை குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரவிடம் வினவியபோது, இந்த விடயம் அமைச்சரவையின் அனுமதி பெற்று தேசிய ரீதியில் தீர்வு காணவேண்டிய பிரச்சினை என குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த விடயம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலும் துறைசார் அதிகாரிகளுடனும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில், கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் துறைசார் அமைச்சிடமிருந்து தனக்கு கடிதம் ஒன்று கிடைத்ததாகவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய செய்திகள்