ஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சு

ஓய்வூதிய முரண்பாடுகள் நீக்கம் - நிதி அமைச்சு

by Fazlullah Mubarak 16-06-2019 | 5:39 PM
Colombo (News 1st) ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதிய பயனாளர்களின் சம்பள முரண்பாடுகளை அடுத்த மாதத்திலிருந்து நீக்கவுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கான கொடுப்பனவு குறைந்தபட்சம் 2,800 ரூபா முதல் அதிகபட்சம் 20,000 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய, அலுவலக உதவியாளர் முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 2,800 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. இதேவேளை, முகாமைத்துவ உதவியாளர் முதலாம் தரத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கான கொடுப்பனவு 5,200 ரூபாவால் உயர்வடையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. ஆசிரியர் சேவையில் முதலாம் தரத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 9,200 ரூபாவாலும் தாதியர் சேவை முதலாம் தரத்தில் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதியம் 7,100 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருக்கான ஓய்வூதியம் 4,200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஓய்வுபெற்ற சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவு 16,000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், 2015 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர்களுக்கான கொடுப்பனவு 20,000 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. ஓய்வூதிய திருத்தத்துடன் ஐந்து, 2,015 சுற்றுநிரூபத்திற்கு அமைய ஓய்வூதிய பயனாளிகளுக்கான சம்பள முரண்பாட்டை நீக்கும் வரை வழங்கப்பட்ட 3,500 ரூபா இடைக்கால கொடுப்பனவு புதிய சம்பளத் திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ளதுடன் 3,525 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு தொடர்ந்தும் கிடைக்கவுள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிப்பதற்காக அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்தில் 12,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.