ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு: ஒன்றிணைந்த பிரகடனத்தில் அரச தலைவர்கள் கைச்சாத்து

by Staff Writer 15-06-2019 | 8:41 PM
Colombo (News 1st) கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் அரச தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். உலக சனத்தொகையில் 3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பை சேர்ந்தவர்கள். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் , இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் கசகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளின் அரச தலைவர்களின் பங்கேற்புடன் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதன்போது, உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஒன்றிணைந்த பிரகடனமொன்றில் அரச தலைவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அதில் சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. வலயத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு, வலயத்தின் அனைத்து நாடுகளினதும் இறைமை மற்றும் ஒருமைப்பாட்டை மதித்து, நாடுகளின் உள்ளக செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தாது, வலய மோதல்கள் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் தலையீடு செய்தல், சர்வதேச பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியன முக்கிய விடயங்களாகும். அத்துடன், அரசியல் தலையீடுகளின்றி, அனைத்து நாடுகளினதும் இறைமை மற்றும் சுதந்திரத்தை மதித்து, சர்வதேச சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற விடயமும் ஒன்றிணைந்த பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கான விஜயம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலும் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
இலங்கைக்கு கடந்த வாரம் விஜயம் மேற்கொண்டிருந்த போது, பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான புனித அந்தோனியார் தேவாலயத்தை பார்வையிட சென்றிருந்தேன். இதன்போது, பயங்கரவாதம் என்ற கொடூர முகத்தினால் எந்தவொரு அப்பாவியின் உயிரையும் பலியெடுக்க முடியும் என்பதை நான் புரிந்துகொண்டேன். இந்த பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு அனைத்து மனித சக்திகளும் எல்லையற்ற வகையில் ஒன்றிணைய வேண்டும். பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும், ஊக்குவிக்கும், நிதியுதவி வழங்கும் அனைத்து அரசுகளும் பயங்கரவாதத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.