ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்தால் உறவில் விரிசல் ஏற்படும்: இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

by Staff Writer 15-06-2019 | 8:55 PM
S400 ரக ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்தால் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தினர் இந்தியாவிற்கு இன்று அறிவித்தனர். இந்தியாவின் யுத்த செயற்பாடுகளுக்கு அமைய, புதிய யுத்த தொழில்நுட்பத்துடனான ஒத்துழைப்பை வழங்குவதற்கு அமெரிக்காவிற்கு பூரண இயலுமையுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ரஷ்யாவிடம் இருந்து புதுடெல்லி ஏவுகணை கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்தால், உறவுகளுக்குள் இடையூறு ஏற்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பதில் உதவி செயலாளர் அலிஸ் ஜீ. வெல்ஸ் இது தொடர்பில் அண்மையில் கருத்து தெரிவித்ததை அடுத்து, ட்ரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எவ்வாறாயினும், ட்ரம்ப் நிர்வாகம் இந்தியாவை பங்குதாரராக நோக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு கீழுள்ள நாடாக பார்க்கக் கூடாது என இந்திய வௌிவிவகார அமைச்சின் முன்னாள் பேச்சாளரும் கனடா மற்றும் தென் கொரியாவின் முன்னாள் இந்திய தூதுவருமான விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார். 18 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அமெரிக்க பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா கொள்வனவு செய்துள்ளதாகவும், அதனைப்போன்றே ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பை கொள்வனவு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேறு நாடொன்று இந்தியா செய்ய வேண்டிய விடயங்களுக்கு வழிகாட்டுவது தகுந்தது அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணை கட்டமைப்பொன்றை துருக்கி கொள்வனவு செய்யத் தயாரான சந்தர்ப்பத்தில், அமெரிக்கா இதனை போன்றே எச்சரிக்கையொன்றை விடுத்திருந்தது. எனினும், S 400 ரக ரஷ்ய ஏவுகணை கட்டமைப்பொன்றை கொள்வனவு செய்யும் நிலைப்பாட்டிலேயே துருக்கி தற்போதும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.