புனரமைப்பு என்ற பெயரில் இழுத்தடிப்பு: பயன்பாடற்ற நிலையில் பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானம்

by Staff Writer 15-06-2019 | 9:18 PM
Colombo (News 1st) மன்னார் - பள்ளிமுனை புனித லூசியா கால்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 60 வருடங்கள் பழமையானது. பல கால்பந்தாட்ட வீரர்களை உருவாக்கிய பெருமை பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதானத்திற்குள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் பயிற்சிபெற்ற கால்பந்தாட்ட வீரர்கள் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளனர். எனினும், மைதான புனரமைப்பினால் கடந்த 5 வருடங்களாக மைதானத்தில் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு நகர திட்டமிடல் அமைச்சின் 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மைதான புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், அது தொடர்பிலான அறிவுறுத்தல் பெயர்ப்பலகை இதுவரை காட்சிப்படுத்தப்படவில்லை. மைதான ஒப்பந்தக்கார்கள் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. மைதான புனரமைப்பிற்கான தீர்வினை பெறுவதற்கு வழிவகைகளை ஆராய்ந்து தருமாறு புனித லூசியா விளையாட்டுக் கழகத்தினரால் அகில இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் மன்னார் கிளையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட ஆய்வுகளின் பிரகாரம், மைதான புனரமைப்பிற்கான புற்கள் உரிய தரமற்ற வகையில் இருப்பதாக அகில இலங்கை பொறியியலாளர் சங்கத்தின் வட மாகாணத்திற்கான உப தலைவர் யூசப்பிள்ளை விமலேஸ்வரன் தெரிவித்தார். பள்ளிமுனை புனித லூசியா மைதானத்தின் புனரமைப்பு பணிகள் நிறைவுறாமை தொடர்பில் மன்னார் நகர சபை தலைவரிடம் வினவிய போது, மைதானத்தின் ஒப்பந்த விடயங்கள் நகர சபைக்கு தெரியாது என குறிப்பிட்டார். இருப்பினும், இந்த வேலைத்திட்டத்தில் நகரசபை இயந்திரங்கள் வழங்குநராகவும், மண் நிரப்புதல் போன்ற வேலைகளை மட்டும் செய்ததாகவும் மன்னார் நகர சபையின் தலைவர் அன்ரன் டேவிட்சன் கூறினார். மன்னார் மாவட்டத்தில் இன்னும் பல வீரர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிமுனை மக்கள் செய்த அர்ப்பணிப்புகளும் விட்டுக்கொடுப்புக்களும் ஏராளம். எனினும், புனரமைப்பு என்ற பெயரில் முற்றுப்பெறாது, கால இழுத்தடிப்பு செய்யப்படுகின்றமைக்கு பெறுப்புக்கூற வேண்டியது யார்?