சஹ்ரானுடன்தொடர்பு: இந்தியாவில் கைதானவரிடம் விசாரணை

சஹ்ரானுடன் தொடர்பு: இந்தியாவில் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை

by Staff Writer 15-06-2019 | 3:51 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காக இந்தியாவில் கைது செய்யப்பட்ட மொஹமட் அசாரூதீன் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 27 ஆம் திகதிக்கு பின்னர் சந்தேகநபரான மொஹமட் அசாரூதீனை காகனாத் (Kakkanad) சிறையில் அடைகுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான மொஹமட் அசாரூதீன் ஐ.எஸ் அமைப்பின் கோயம்புத்தூர் பகுதிக்கான தலைவராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்கொலை குண்டுதாரி மொஹமட் சஹ்ரானுடன் மொஹமட் அசாரூதீன், நெருங்கிய தொடர்புகளை பேணியுள்ளதாக இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து கோவையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். உக்கடத்தில் அசாரூதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா உள்ளிட்டோரது வீடுகளில் இந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்போது, மொஹமட் அசாரூதீன் என்ற சந்தேகநபர் பயங்கரவாதி சஹ்ரானுடன் சமூக வலைத்தளத்தின் ஊடாக தொடர்புகளை பேணி வந்தமை உறுதி செய்யப்பட்டதாக இந்தியாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் அமைப்பு சார்பில் கேரளாவில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபூபக்கருடனும் இவர் தொடர்புகளை பேணியுள்ளமை தெரியவந்துள்ளது.