USAID மற்றும் Millennium Challenge Corporation ஆகியவற்றை முன்னெடுத்துச்செல்ல நடவடிக்கை எடுப்போம்: அலிஸ் ஜீ. வெல்ஸ்

by Staff Writer 14-06-2019 | 9:05 PM
Colombo (News 1st) அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பதில் உதவி செயலாளர் அலிஸ் ஜீ. வெல்ஸ் (Alice G. Wells) சுதந்திர மற்றும் திறந்த இந்து - பசுபிக் வலயம் தொடர்பில் கருத்து தெரிவித்தார். தெற்காசியா தொடர்பில் அமெரிக்காவிற்குள்ள ஆர்வம் மற்றும் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடும் வௌிவிவகாரம் தொடர்பான குழுநிலை விவாதத்தின் போது அவர் தெரிவித்ததாவது,
திறந்த மற்றும் சுதந்திர பசுபிக் வலயம் தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளன. இந்து - பசுபிக் வலயத்தில் தம்மையும் இணைப்பதற்கு சீனா எடுக்கும் முயற்சி தொடர்பில் நாம் அதிருப்தியடைகின்றோம். அவர்களின் கொள்ளையடிக்கும் கடன் கொள்கையை முன்னெடுத்துச்செல்ல முடியாது. சூழல் மற்றும் தொழிலாளர் தரங்களுக்கு முரணான மற்றும் இந்து சமுத்திரத்தின் இறையாண்மையை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தும் கடனை இலங்கை அல்லது பாகிஸ்தான் அல்லது மாலைத்தீவிற்கு வழங்கினால் நாம் கவலையடைவோம். இந்த வலய நாடுகள், ஜனநாயக நாடான எமது நாடு மற்றும் அவ்வாறு சிந்திக்கும் ஏனைய நாடுகளுடன் இணைந்து மாற்று வழியை வழங்குவதற்கான தேவையை நாம் புரிந்துகொண்டுள்ளோம். இதனை எந்த வகையிலும் தவறாக நாம் பயன்படுத்தப்போவதில்லை. நாடொன்றுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனின், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை பலி கொடுக்க வேண்டியதில்லை. எமது நிதி அபிவிருத்திக்காக எடுக்கக்கூடிய செயற்பாட்டு ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ளோம். வலயத்தின் உறவுகளை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள USAID மற்றும் Millennium Challenge Corporation ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்போம். இந்த புதிய தொடர்புகள் குறித்து G20 மாநாட்டில் இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்களை ஜனாதிபதி சந்தித்து மேலும் கலந்துரையாடவுள்ளார்.