by Bella Dalima 14-06-2019 | 7:21 PM
Colombo (News 1st) வீடமைப்பு உதவிகள் போன்ற வெளிநாட்டு உதவித் திட்டங்கள் கிடைக்கப்பெற்ற போதும் அவற்றை மக்களுக்கு வழங்குவதில் அரச அதிகாரிகள் காட்டிய மெத்தனப்போக்கு விசனத்திற்குரியது என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.
ஓரிடத்தில் குடியிருந்தவர்களின் வீடு, வாசல்களை அரச படைகள் போரின் போது உடைத்தெறிந்து, அவர்களை இடம்பெயர செய்துவிட்டு, பின்னர் மீள்குடியமர்வின் போது குடும்பத்தில் ஒருவருக்கு வீடில்லை, இரு உறுப்பினர்களுக்கு வீடில்லை, அரச உத்தியோகத்தர்களுக்கு வீடில்லை என தாமாகவே சட்டங்களை வகுத்து செயற்பட்டது மாத்திரமன்றி, வழங்கப்பட்ட வீடமைப்பு உதவித் திட்டங்களில் அரைவாசிக்கு மேல் மீளத்திருப்பி அனுப்பப்பட்டதாகவும் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
வீடமைப்பு உதவித் திட்டங்கள் மாகாண சபையால் திருப்பி அனுப்பப்படவில்லை என தெரிவித்த அவர், பிரதேச செயலாளர்களும் மத்தியின் அலுவலர்களுமே அவ்வாறு செய்ததாக குற்றம் சாட்டினார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.