எரிபொருள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எரிபொருள் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரித்தது ஈரான்

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2019 | 9:57 pm

எரிபொருள் ஏற்றிச்சென்ற இரண்டு கப்பல்கள் ஓமான் கடல் மார்க்கத்தில் வெடிப்பிற்குள்ளாகின.

இதனால் இரண்டு கப்பல்களும் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஜப்பானுக்கு சொந்தமான Courageous மற்றும் நோர்வேக்கு சொந்தமான Front Altair ஆகிய இரண்டு கப்பல்களே இவ்வாறு வெடித்துள்ளன.

கப்பல்களில் இருந்தவர்களை ஈரான் மற்றும் அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

Front Altair கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் அருகிலிருந்த மற்றுமொரு கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு ஈரான் கப்பலொன்றுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஈரானின் தெற்கு துறைமுகத்திற்கு தற்போது அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Courageous கப்பலில் இருந்த 21 ஊழியர்களையும், U.S.S. Bainbridge அமெரிக்க கப்பலில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து சிங்கப்பூருக்கு Courageous கப்பல், Methanol கொண்டு சென்றிருந்ததாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

தாய்வான் எரிபொருள் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய Front Altair கப்பல், Naptha என்ற இரசாயனப் பொருளுடன் பாரசீக வளைகுடாவில் இருந்து ஜப்பான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவங்களுக்கான உரிய காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

இதற்கான பொறுப்பை ஈரான் ஏற்க வேண்டும் என அமெரிக்கா குற்றச்சாட்டு முன்வைக்கின்ற போதிலும், ஈரான் அதனை நிராகரித்து, அமெரிக்கா ஆவேசமாக செயற்படுவதாகக் கூறியுள்ளது.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில், மத்திய கிழக்கு வலயத்தில் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை பாரிய சிக்கல் என சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் எரிபொருள் ஏற்றிச்சென்ற நான்கு கப்பல்கள் மீது ஒரு மாதத்திற்கு முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கு அண்மையிலேயே ஓமான் கடல் மார்க்கம் உள்ளது.

பில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருட்கள் கொண்டு செல்லும் பயண மார்க்கமாக ஓமான் கடல் மார்க்கம் விளங்குகின்றது.

சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் பாரிய துறைமுகமான க்வாதா துறைமுகம் இதற்கு அருகில் அமைக்கப்படுகின்றமை இந்த கடல் வலயத்தின் மற்றுமொரு முக்கியத்துவமாகும்.

இது சீனாவின் கடல்மார்க்கத்தின் அரணாகும்.

இரண்டு கப்பல்களும் வெடிப்புக்குள்ளான பகுதியை, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS Mason கப்பல் தற்போது நெருங்கி வருவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த கடல் வலயத்தில், அமெரிக்க பாதுகாப்பு படைகளுக்கு, ஈரானுடன் நெருங்கிய இராணுவங்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தெரிவித்து, அமெரிக்க விமானத் தாக்குதல் குழுவொன்று கடந்த மே மாதம் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில், அமெரிக்காவில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் அமைச்சரவையின் பிரதம செயலாளர் யோஷிஹீடே சுபா கூறியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் தமது அரசாங்கம் மேலும் தகவல்களை சேகரிப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்களுக்கு அவர் கருத்து வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்