முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பிரதம நீதியரசர் அனுமதி

by Staff Writer 13-06-2019 | 4:20 PM
Colombo (News 1st) மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக மேல் மாகாண நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய பிரதம நீதியரசர் அனுமதி வழங்கியுள்ளார் . இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் ஜோசப் அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக, மேல் மாகாண நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்குத் தொடர்வதற்கு, பிரதம நீதியரசரிடம் அனுமதி கோரியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தன்மை, சர்ச்சை மற்றும் ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாரிய அச்சுறுத்தல் என்பவற்றை கவனத்திற்கொண்டு, வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிரோஷா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27 ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தின்போது, 10,058 பில்லியன் ரூபா திறைசேரி முறிகளை மோசடியான முறையில் கையாண்டமை தொடர்பில் பொதுச்சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 5/1 பிரிவின் கீழ் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.