பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஹிஸ்புல்லா வாக்குமூலம்

by Staff Writer 13-06-2019 | 8:35 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M. L. A. M. ஹிஸ்புல்லா இன்று வாக்குமூலம் வழங்கினார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியது. கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M. L. A. M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் ஆகியோர் இன்று பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் M.I.M. ரிஸ்வி மௌலவி, காத்தான்குடி முஸ்லிம் பள்ளிவாசல் சங்கத்தின் தலைவர் ஆகியோர் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியிருந்தனர். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் ஆகியோரும் ஏற்கனவே வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.