இ.போ.ச பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

இ.போ.ச தேசிய ஊழியர் சங்க பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

by Staff Writer 13-06-2019 | 6:43 PM
Colombo (News 1st) இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இன்று முற்பகல் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்ததாக தேசிய ஊழியர் சங்கத்தின் நாரஹென்பிட்ட தலைமை காரியாலயத்தின் செயலாளர் ரஞ்சித் விஜயசிறி குறிப்பிட்டார். இதன் காரணமாக தங்களின் கோரிக்கைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதால், பகிஷ்கரிப்பை கைவிட்டதாக அவர் கூறினார். பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஊழியர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஞ்சித் விஜயசிறி தெரிவித்தார். தமது ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை பஸ் ஊழியர்களால் கடந்த இரண்டு தினங்களாக பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. பணிப்பகிஷ்கரிப்பினால் 40-க்கும் அதிகமான டிப்போக்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.