சர்ச்சைக்குரிய 4 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை

சர்ச்சைக்குரிய 4 வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை

எழுத்தாளர் Staff Writer

13 Jun, 2019 | 4:02 pm

Colombo (News 1st) சர்ச்சைக்குரிய 4 வழக்குகள் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் C.T.விக்ரமரத்னவிற்கு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வழக்குகள் தொடர்பான முழுமையான அறிக்கையை தமக்கு சமர்ப்பிக்குமாறும் சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு இந்த ஆலோசனைக் கடிதத்தின் பிரதியை அனுப்பியுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை, ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலை, மூதூரில் இயங்கிய Action Against Hunger எனும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டமை ஆகிய வழக்குகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்படையினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 11 இளைஞர்கள் கடத்தி, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கின் விசாரணையையும் துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்