தென்மேற்குப் பகுதியில் அதிக மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அதிக மழை பெய்யக்கூடிய சாத்தியம்

by Staff Writer 12-06-2019 | 11:21 AM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் அடுத்த சில தினங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களில் இன்று (12ஆம் திகதி) மழையுடனான வானிலை நீடிக்கும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நேற்றிரவு கொழும்பு - கோட்டை பகுதியில் 41.5 மில்லிமீற்றரிலும் கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தை பகுதியில் 35 மில்லிமீற்றரிலும் காலி - லபுகம பகுதியில் 26 மில்லிமீற்றரிலும் இரத்தினபுரியில் 29.9 மில்லிமீற்றரிலும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, களுத்துறை மற்றும் காலி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்தோடு, நிலப்பரப்பில் காற்றின் வேகம் தொடர்ந்தும் அதிகரிக்கும் என திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய, வட மேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்கயில் மணித்தியாலத்திற்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதேவேளை, வட பிராந்தியத்தில் காற்றின் வேகம் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.