டிப்போக்கள் சிலவற்றின் பிரதான வாயில்களை மறித்து பகிஷ்கரிப்பு

டிப்போக்கள் சிலவற்றின் பிரதான வாயில்களை மறித்து பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2019 | 1:04 pm

Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் 3 டிப்போக்களின் பிரதான வாயில்களை மறித்து பஸ் ​போக்குவரத்துத் தடை ஏற்படுத்தியுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மஹரகம, அக்குரஸ்ஸ மற்றும் நீர்கொழும்பு டிப்போக்களின் பிரதான வாயில்கள் மறிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த வாயில்களை மீளத்திறந்து, டிப்போக்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸாரைக் கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 75 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் நேற்று (11ஆம் திகதி) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக,இலங்கை போக்குவரத்துச் சபையின் தேசிய ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தமது உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 5100 பதவி உயர்வுகளை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பதவி உயர்வுகள் சட்டரீதியாக வழங்கப்படவில்லை என இலங்கை ​போக்குவரத்துச் சபையின் தலைவர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – காலி வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளிலும் இலங்கை ​போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபடுவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கம்பஹா டிப்போவின் பஸ்கள் சேவையில் ஈடுபடவில்லை.

புத்தளம் மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், குருணாகல் மாவட்டம் மற்றும் கண்டியில் இருந்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வழமைபோன்று பஸ் போக்குவரத்து இடம்பெறுவதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்