இயற்கையிலும் காலநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – திமுத் கருணாரத்ன

இயற்கையிலும் காலநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – திமுத் கருணாரத்ன

இயற்கையிலும் காலநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது – திமுத் கருணாரத்ன

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2019 | 7:28 am

Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள நாட்களில் தரவரிசையில் முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளை எதிர்த்தாடவுள்ளமையால் அதற்குத் தயாராதல் வேண்டும் என, இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான மழை காரணமாக தடைப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

விளையாட வேண்டும் என்பதே அனைவரது தேவையாகவும் இருப்பதோடு, நாட்டு மக்கள் உள்ளிட்ட அனைவரும் விளையாடுவதை பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். ஆனாலும், இயற்கையிலும் காலநிலையிலும் எம்மால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என திமுத் கருணாரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தப் போட்டிக்கு பின்னர் முக்கிய சில போட்டிகளில் பங்கேற்கவிருப்பதால் தமது  தயார்படுத்தல்களை சிறந்த முறையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் எஞ்சியுள்ள நாட்களில் தரவரிசையில் முதலிடங்களில் நீடிக்கின்ற அணிகளை எதிர்த்தாடவுள்ளமையால் அந்த சவாலுக்கு முதலில் தயாராதல் வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டுவது மிக முக்கியம். வெற்றியீட்டாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. தற்போதைக்கு தாம் 4 புள்ளிகளை பெற்றிருக்கின்ற நிலையில், தர வரிசையில் முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் இரு போட்டிகளிலாவது வெற்றியீட்டினால் மாத்திரமே முதல் 4 இடங்களுக்குள் முன்னேற முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சவால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இருக்கின்றது. எல்லா போட்டிகளிலும் வெற்றியீட்டும் எதிர்ப்பார்ப்பிலேயே விளையாடுகின்றதாகவும் எஞ்சியுள்ள 5 போட்டிகளில் இரண்டிலாவது வெற்றியீட்டி முதல் 4 இடங்களில் நீடிக்க வேண்டும் எனவும் திமுத் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உபாதைக்குள்ளாகியுள்ள நுவன் பிரதீப் தொடர்பிலும் திமுத் கருத்துத் தெரிவித்திருந்தார்.

நுவன் பிரதீப்புக்கு நிச்சயமாக ஒரு வார காலம் ஓய்வளிக்கப்பட வேண்டும். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக அவர் தயாராகி விடுவார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நுவன் பிரதீப் உபாதைக்குள்ளானதன் பின்னர் பந்துவீசவோ அல்லது பயிற்சிகளில் ஈடுபடவோ இல்லை என்பதால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு அவரது நிலை தொடர்பில் நிச்சயமாக கூற முடியாதுள்ளது. இவ்வாறான விடயங்களை கருத்திற்கொண்டே அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது தொடர்பில் கூற முடியும் எனவும் திமுத் கருணாரத்ன இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு, லசித் மாலிங்க இன்று நாடு திரும்பவுள்ளதுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன்னர் எம்முடன் இணைந்துகொள்வதாக கூறியுள்ளதால் தாங்கள் அனைவரும் அவரது வரவை எதிர்பார்த்துள்ளதாகவும் அவ்வாறு அவர் அணியுடன் இணையாத சந்தர்ப்பத்தில் மாற்றுவீரர் அணியில் விளையாடுவார் எனவும் எனினும் அவ்வாறு நடைபெறும் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியைத் தவறவிட்டாலும் மற்றைய போட்டிகளில் விளையாடுவார் எனவும் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்