மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழுவில் வாக்குமூலம்

by Staff Writer 11-06-2019 | 8:26 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இன்று அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது, தௌஹீத் ஜமாத்தின் பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து தாம் தௌிவூட்டியதாகவும் இது தொடர்பான ஆவணங்களையும் புகைப்படங்களையும் இரண்டு வருடங்களுக்கு முன்னரே தாம் வழங்கியிருந்ததாகவும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி பாராளுமன்ற தெரிவுக்குழுவில் குறிப்பிட்டார். அளுத்கம சம்பவம் இடம்பெற்றபோது, அளுத்கம பொலிஸிற்கு சென்று தாம் முறைப்பாடு செய்ததாகவும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது ஆணைக்குழுவொன்றை நியமித்து அது தொடர்பில் விசாரிப்பதாக உறுதி அளித்த போதும், இதுவரை ஆணைக்குழு நியமிக்கப்படவில்லை என்றும் அசாத் சாலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் 2017ஆம் ஆண்டில் சஹ்ரானால் 120 வீடுகளுக்கு தீ மூட்டப்பட்டது. பொலிஸார் சென்று எதனையும் செய்யவில்லை. கைது செய்வதற்கு முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். பொலிஸாரும் தௌஹீத் ஜமாத்தும் ஒன்றாக செயற்பட்டன. அதற்கு எதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடினம் அனுப்பியுள்ளேன். அதன் பிரதியையும் என்னால் வழங்க முடியும்.
என பாராளுமன்ற தெரிவுக்குழு  முன் அசாத் சாலி கூறினார்.