முன்னிலை அணிகளுக்கு சவால் விடுக்க முடியும் - குசல்

முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளுக்கு எதிராக சவால் விடுக்க முடியும் - குசல் ஜனித் பெரேரா

by Staff Writer 11-06-2019 | 1:50 PM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள அனைத்துப் போட்டிகளும் முக்கியமானவை என, இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார். அபாரத் திறமையை வௌிப்படுத்துகின்ற பங்களாதேஷ் அணியினரின் பலத்தையும் பலவீனங்களையும் நாம் அறிவதுபோல் தன்னுடைய பலம் மற்றும் பலவீனத்தை தான் அறிவதாகக் கூறிய குசல் ஜனித் பெரேரா, தனது முழுமைத் திறமையையும் அணிக்காகப் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியும் தமக்கு மிக முக்கியமானவை எனவும் கடந்த சில போட்டிகளில் தாம் திறமையை வெளிப்படுத்தவில்லை எனக் கூறியதோடு, முன்னிலையில் நீடிக்கின்ற அணிகளுக்கு எதிராக சவால் விடுப்பதற்குத் தம்மால் முடியும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு, கடந்த சில போட்டிகளில் தான் சிறந்த முறையில் விளையாடியதாக நினைப்பதாகவும் குசல் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பாக விளையாட வேண்டும். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் என்ற ரீதியில் 40 ஓவர்கள் வரை துடுப்பெடுத்தாட வேண்டும். இது தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுவதாகவும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, குசல் ஜனித் பெரேரா தொடர்பில் இலங்கை அணியின் பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
குசல் ஜனித் பெரேரா போட்டிகளை வென்று கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். அதுமாத்திரமன்றி அவர் அதிசிறந்த துடுப்பாட்ட வீரர். அதுபோன்றதொரு வீரரை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக்கி அணியை பலம் மிக்கதாக்குவதே எமது தேவையாகும். அவரது அனுபவத்தைக் கொண்டு தொடரின் ஆரம்பத்திலிருந்து திறமையை வெளிப்படுத்துவராக இருந்தால் அது எமக்கு அதிக சாதகங்களைத் தோற்றுவிக்கும்
என, இலங்கை அணியின் பயிற்றுநரான சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இன்று (11ஆம் திகதி) தனது நான்காவது போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடுகின்றது. இலங்கை அணியும் பங்களாதேஷும் இறுதியாகக் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியொன்றில் இறுதியாக மோதியதுடன், அந்தப் போட்டியில் இலங்கை அணி 137 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 1986 ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியும் பங்களாதேஷும் இதுவரையில் 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இலங்கை அணி 36 போட்டிகளிலும் பங்களாதேஷ் 7 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன. இரண்டு போட்டிகள் வெற்றி தோல்வியற்ற முடிவை எட்டியுள்ளன. உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியும் பங்களாதேஷும் 3 தடவைகள் மோதியுள்ளதுடன், அந்த 3 போட்டிகளிலுமே இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. பயிற்சியின்போது உபாதைக்குள்ளான வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப்புக்கு பதிலாக ஜீவன் மென்டிஸ் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளார். உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 50 விக்கெட்களை வீழ்த்திய நான்காவது பந்துவீச்சாளர் என்ற சிறப்பை பெறுவதற்கு இலங்கை அணியின் நட்த்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு மேலும் 4 விக்கெட்கள் மாத்திரமே தேவையாகவுள்ளது. இன்றைய போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றும் பட்சத்தில் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சமிந்த வாஸின் 49 விக்கெட் சாதனையை லசித் மாலிங்க சமன்செய்வார். இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி பிரிஸ்டல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்மாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.