by Staff Writer 11-06-2019 | 5:38 PM
சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து செல்ல வேண்டியதில்லை: பிரதமர் அலுவலகம் அறிக்கை
பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி அல்லது ஒசரி மாத்திரம் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என வௌியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்து பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது.
பிரதமர் செயலாளர் E.M.S. ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் குறித்த அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து செல்லுமாறு அறிவிப்பது மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி, பிரதமர் அலுவலகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.
பெண் அரச உத்தியோகத்தர்கள் சாரி மற்றும் ஒசரி மாத்திரம் அணிந்து அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என பொது நிர்வாக மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சு அண்மையில் சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டது.
அதேபோன்று, அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஆண் ஊழியர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய ஆடையை அணிந்து வருமாறும் குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த சுற்றறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டு அதனை மீண்டும் வௌியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மீள அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.