கொக்கட்டிச்சோலையில் கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலத்தை தேடும் பணிகள் முன்னெடுப்பு

by Staff Writer 11-06-2019 | 9:19 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலையில் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலத்தை தோண்டி எடுக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்ட போதும் எச்சங்கள் எதுவும் மீட்கப்படவில்லை. 23 வயதான பொலிஸ் கான்ஸ்டபிள் நாகராஜா பிரசாந்தனுக்கு 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸூக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. இடமாற்றம் வழங்கப்பட்ட தினத்தன்று பொலிஸ் கான்ஸ்டபிள் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகராஜா பிரசாந்தனின் தந்தையால் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பொலிஸ் கான்ஸ்டபிள் நாகராஜ் பிரசாந்தன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள், கொக்கட்டிச்சோலை - முன்னைக்காடு பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி இரண்டு சந்தேகநபர்களும் கடந்த ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி மூன்றாவது சந்தேகநபரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய சந்தேகநபர்களில் ஒருவர் இன்று முனைக்காடு பொது மயானத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு, பெக்கோ மூலம் சடலத்தை தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நீதவான் ஏ.சி. ரிஸ்வான், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிகள் முன்னிலையில் இந்தப் பணிகள் இடம்பெற்றன. எனினும், இதன்போது சடலம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் முனைக்காடு பொது மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.