குசும்தாச, பியதாசவிற்கு எதிரான விசாரணைகள் நிறைவு

குசும்தாச மஹனாம, பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

by Staff Writer 11-06-2019 | 3:39 PM
Colombo (News 1st) ஜனாதிபதி செயலணியின் முன்னாள் தலைமை அதிகாரி கலாநிதி குசும்தாச மஹனாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திசாநாயக்க ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. 20 மில்லியனுக்கும் அதிக நிதியை இலஞ்சம் பெற்றமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த இரண்டு சந்தேகநபர்களுக்கும் தற்போது பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதிகளுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் மன்றுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. திருகோணமலை - கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான கட்டடம் மற்றும் இயந்திர கட்டமைப்பை இந்திய நிறுவனமொன்றுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக 20 மில்லியனுக்கும் அதிக நிதியை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.