கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி?

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி என தகவல்

by Staff Writer 11-06-2019 | 12:18 PM
Colombo (News 1st) மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம் (Kim Jong Nam), அமெரிக்க உளவுப்பிரிவின் உளவாளி என வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை (Wall Street Journal) செய்தி வௌியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பிலான பல தகவல்களை அறிந்தவர் என பெயர் குறிப்பிடாத ஒருவரை மேற்கோள்காட்டி இந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது. கிம் ஜோங் நாமுக்கும் அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளதாக குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் பதிலளிக்க CIA மறுத்துள்ளது. வட கொரியாவிலிருந்து வௌியேறி பல வருடங்களாக வேறு நாடுகளில் வாழ்ந்துவந்த கிம் ஜோங் நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்புச் சேவைகளுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் Wall Street Journal செய்தி வௌியிட்டுள்ளது. கிம் ஜோங் நாம், CIA உடன் தொடர்புள்ள ஒருவரை சந்திக்கும் நோக்கிலேயே 2017 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்திருந்ததாகவும் பெயர் குறிப்பிடாத நபரை மேற்கோள்காட்டி அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கிம் ஜோங் நாமை கொலை செய்யுமாறு வட கொரிய அதிகாரிகள் உத்தரவிட்டதாக தென் கொரிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குற்றஞ்சுமத்திய போதிலும் வட கொரியா குற்றச்சாட்டை மறுத்திருந்தது. இந்தக் கொலைச்சம்பவம் தொடர்பில் மலேசிய மற்றும் இந்தோனேஷிய பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்கள் கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.