21ஆவது அகவையில் கால் பதிக்கும் சிரச TV

21ஆவது அகவையில் கால் பதிக்கும் சிரச TV

by Staff Writer 10-06-2019 | 8:46 PM
Colombo (News 1st) ஊடகத்துறையை மக்கள் சேவையாக மாற்றி இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் ஈடுசெய்யமுடியா புரட்சியை ஏற்படுத்திய எமது குடும்பத்தின் சகோதர தொலைக்காட்சியான சிரச TV இன்று தனது 21ஆவது அகவையில் கால்பதிக்கின்றது. தொலைக்காட்சி வரலாற்றில் புதிய பரிணாமங்களை வழங்கிய சிரச தொலைக்காட்சி 1998 ஆம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளில் ஆரம்பமானது. இலங்கையின் தொலைக்காட்சி இல்லத்திரைகளில் மக்கள் மனதை வென்ற சிரச தொலைக்காட்சி காலத்திற்கேற்ற புதிய நிகழ்ச்சிகள் மூலம் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரது மனதையும் வென்றெடுத்தது. உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு நெடுந்தொடர்கள் மூலமும் சமகால அரசியல் நிகழ்ச்சிகள் மூலமும் அதிகளவிலான நேயர்களை கவர்ந்தெடுத்தது. இலங்கையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்த பெருமையும் சிரச தொலைக்காட்சியையே சாரும். சிரச சுப்பஸ்டார் ஊடாக கிராமத்திலுள்ள திறமையான இளைஞர், யுவதிகளுக்கு மேடையமைத்துக் கொடுத்ததுடன் சுப்பஸ்டார் நிகழ்ச்சியினூடாக இலங்கையின் கலைத்துறைக்கு பல நட்சத்திரங்கள் உருவாகினர். சிரச டான்சிங் ஸ்டார், சிரச குமரிய மற்றும் மான் ஹன்ட் நிகழ்ச்சியூடாகவும் புதிய அனுபவத்தை சிரச ரீவி பெற்றுக்கொடுத்தது. புஞ்சி பகே மங், சிரச லக் ஷபதி, பென்டதலன், டிபேட்டர் போன்ற நிகழ்ச்சிகளும் மக்களின் மனதை வென்றெடுத்த நிகழ்ச்சிகளாகும். இயற்கை அனர்த்தங்களின்போதும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிக்கரம் நீட்டும் மனிதநேயம் கொண்ட பணிகளை சிரச ரீவி தொடர்ந்தும் முன்னெடுத்துவருகின்றது. 21 வருடங்களாக இலங்கை வாழ் மக்களின் தேசிய தேவைகளையும் மக்களின் இதயத்துடிப்பையும் அடையாளம் கண்டு மக்களுக்காக மக்களின் தொலைக்காட்சியாக செயற்படும் சிரச ரீவி மரக்கன்றுகளை நாட்டி 21ஆவது நிறைவாண்டைக் கொண்டாடியது. இதன் முதலாவது கட்டம் கம்பளை பிரதேச செயலகத்தை மையமாகக் கொண்டு நேற்று நடைபெற்றதுடன், இதன்போது 7 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.