by Staff Writer 10-06-2019 | 6:16 PM
Colombo (News 1st) 162 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்தமை தொடர்பில் சுமார் 10 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சக்வித்தி ரணசிங்க என்றழைக்கப்படும் அபயரணசிங்க முதியன்சலாகே சந்தன வீரகுமாரவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சக்வித்தி ஹவுஸ் அன்ட் கன்ரெக்ஷன் தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த 162 கோடி ரூபாவிற்கும் அதிக நிதியை மோசடி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளின் பிரதான சந்தேகநபர் இவராவார்.
2009 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்ட சத்வித்தி ரணசிங்க இதுவரைகாலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவர் மீதான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, 6 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான 6 சரீர பிணைகளிலும் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, இந்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.