by Staff Writer 10-06-2019 | 7:18 PM
Colombo (News 1st) பொரளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியை விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களை எதிர்வரும் 12ஆம் திகதி அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இன்று (10ஆம் திகதி) உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
விபத்து தொடர்பில் பெறப்பட்டுள்ள CCTV காணொளியையும் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் அறிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் பிணை வழங்கப்பட்டுள்ள சந்தேகநபர்களும் உள்ளனரா என்பது தொடர்பில் அடையாளம் காண்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய டிபெண்டர் வண்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆகவே, குறித்த டிப்பெண்டர் வண்டியை அதன் உரிமையாளரிடம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், குறித்த டிப்பெண்டர் வண்டி சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ளமையால் அதனை விடுவிக்க பொலிஸார் எதிர்ப்பு வௌியிட்டுள்ளனர்.
அதற்கமைய, டிப்பெண்டர் வண்டி தொடர்பில் அறிக்கை ஒன்றை மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பிணை வழங்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களுக்கு எதிராக எந்த சட்டத்தின் வழக்கு தொடர்வது என்பது குறித்து சட்டமா அதிபரின் பரிந்துரையை பெற்று, மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.