ஏப்ரல் 21 தாக்குதல்: விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

by Staff Writer 10-06-2019 | 4:30 PM
Colombo (News 1st) கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொடவினால் இந்த அறிக்கை இன்று (10ஆம் திகதி) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்குக் காரணமாக அமைந்த விடயம் மற்றும் அதன் பின்னணி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி ஜனாதிபதியால் மூவரடங்கிய விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த விசாரணைக் குழுவிற்கு நியமிக்கப்பட்டனர். இந்தக் குழுவின் விசாரணைகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டன. அதற்கான இடைக்கால அறிக்கைகளும் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.