வெனிசூலா - கொலம்பிய எல்லை மீளத் திறப்பு

வெனிசூலா - கொலம்பிய எல்லை மீளத் திறப்பு

by Staff Writer 09-06-2019 | 7:26 AM
Colombo (News 1st) வெனிசூலா - கொலம்பிய எல்லை 4 மாதங்களின் பின்னர் மீளத் திறக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை அடுத்து, வெனிசூலா - கொலம்பிய எல்லையை மூடுமாறு, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தார். இதனால், வெனிசூலா மக்களுக்கான உணவு மற்றும் மருந்து விநியோகத்தில் பாரிய சிக்கல் ஏற்பட்டதுடன் பலர் நாட்டை விட்டும் வௌியேறியிருந்தனர். தற்போது மீண்டும் எல்லை திறக்கப்பட்டதன் பின்னர் 10,000க்கும் மேற்பட்ட மக்கள், தமக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காக நீண்டவரிசையில் காத்திருப்பதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவின் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் கைடோ தம்மை தாமே அறிவித்துக் கொண்டார். இந்நிலையில், அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய வெனிசூலா மக்களை அதிலிருந்து மீட்பதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் ஜூவான் கைடோ தீர்மானித்திருந்தார். எவ்வாறாயினும், நாட்டிற்குள் வௌிநாட்டு சக்திகள் ஊடுருவ இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ, கொலம்பியா, பிரேஸில் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளை மூடுவதற்கு உத்தரவிட்டார். இதேவேளை, வெனிசூலாவில் நீண்டகாலமாகத் தொடரும் அரசியல் - பொருளாதார நெருக்கடிகளினால் 2015ஆம் ஆண்டிலிருந்து 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.