UPDATE:பாரதப் பிரதமர் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகை

by Staff Writer 09-06-2019 | 7:07 AM
Colombo (News 1st) UPDATE: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (9ஆம் திகதி) முற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார். ------------------------------------------------------------------------------------------------------------------------------ பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (9ஆம் திகதி) நாட்டிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்திய பிரதமர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார். இரண்டாவது தடவையாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர் அவர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது நாடு இலங்கையாகும். நேற்றைய தினம் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக மாலைதீவிற்கு பயணித்திருந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வினை ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்துள்ளது. பாரதப் பிரதமர் இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார். இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் இந்திய பிரதமர் சந்திக்கவுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியப்பிரதமர் இன்று பிற்பகல் மீண்டும் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லவுள்ளதுடன், இந்த விஜயத்தினை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊடங்களை தௌிவுபடுத்தினார். இதேவேளை, இந்திய பிரமர் நரேந்திர மோடியின் விஜயத்தின்போது இருநாட்டு பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து, இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கைக்கு அமைய, தாம் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் பயங்கரவாத்திற்கு எதிராக இலங்கையுடன் இந்தியா கைகோர்த்து செயற்படும் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.