by Staff Writer 09-06-2019 | 7:00 AM
Colombo (News 1st) உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷூக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து 106 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இங்கிலாந்து நிர்ணயித்த 387 ஓட்டங்களை நோக்கிப் பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணியால் 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.
கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்துக்கு அணிக்கு ஜேசன் ரோய் மற்றும் ஜொன்னி பெயார்ஸ்ரோ ஜோடி முதல் விக்கெட்டில் அதிரடியாக 128 ஓட்டங்களை பகிர்ந்தது.
ஜொன்னி பெயார்ஸ்ரோ 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஜேசன் ரோய் ஒருநாள் அரங்கில் ஒன்பதாவது சதத்தை எட்டிய நிலையில் 121 பந்துகளில் 153 ஓட்டங்களை பெற்றார்.
மத்தியவரிசையில் ஜொஸ் பட்லர் 33 பந்துகளில் அரைச்சதம் கடந்ததோடு 64 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
கடைசி நேரத்தில் லியன் ப்ளங்கட் 9 பந்துகளில் 27 ஓட்டங்களை விளாசி, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ஓட்டங்களைப் பெற்றது.
இவ்வருடத்தில் மாத்திரம் ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து 300 ஓட்டங்களைக் கடக்கும் ஏழாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இதன்மூலம் சர்வதேச ஒருநாள் அரங்கில் ஒரு வருடத்தில் 7 தடவைகள் 300 ஓட்டங்களைக் கடந்த முதல் அணியாக இங்கிலாந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அத்துடன், இவ்வருட உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து 300 ஓட்டங்களை மூன்றாவது தடவையாக இன்றைய போட்டியில் கடந்திருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் சார்பாக ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்பிகூர் ரஹீம் ஜோடி மூன்றாவது விக்கெட்காக 106 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
முஸ்பிகூர் ரஹீம் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும் அபாரமாக விளையாடிய சகீப் அல் ஹசன் ஒருநாள் அரங்கில் தனது எட்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் அவர் சதமடிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.