மோடிக்கு விருந்து கொடுத்த ஜனாதிபதி மைத்திரி

மோடிக்கு விருந்து கொடுத்த ஜனாதிபதி மைத்திரி

மோடிக்கு விருந்து கொடுத்த ஜனாதிபதி மைத்திரி

எழுத்தாளர் Fazlullah Mubarak

09 Jun, 2019 | 7:35 pm

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டிற்கு வருகைதந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.

நரேந்திர மோடி, ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது வெளிநாட்டு அரச தலைவராவார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜனாதிபதி செயலகத்தில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆரம்பமானது.

பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாட்டிற்குள் அமைதியின்மை ஏற்பட்டிருக்கும் தருணத்தில் இலங்கைக்கு வருகை தந்ததன் ஊடாக உலகிற்கு வழங்கிய செய்தி தொடர்பில் இதன்போது இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அண்டைய நட்பு நாடுகளாக இலங்கை மற்றும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள வலிமையான மற்றும் நம்பிக்கைக்குரிய பிணைப்பு, இந்தியப் பிரதமரின் இந்த விஜயத்தினூடாக தெளிவாவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த விஜயம் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கையின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை மீண்டெழும் என நம்புவதாக ஜனாதிபதி இதன்போது நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாதிப்புக்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் ஒருவருக்கொருவர் உதவுவதே, நட்பு நாடுகளின் கடமை என இதன்போது நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது இந்தியா கொண்டுள்ள நம்பிக்கை தொடர்ந்தும் அவ்வாறே பேணப்படும் என இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், அதனை ஒழிப்பதற்கான சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர்.

அநுராதபுரம் மஹ மெவ்னாவில் உள்ள சமாதி புத்தர் சிலையின் மாதிரியொன்றை ஜனாதிபதி இதன்போது இந்தியப் பிரதமருக்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

பாரதத்ததின் பிரதமராக இரண்டாவது தடவையாக பதவியேற்றதன் பின்னர் நரேந்திர மோடி மேற்கொண்ட இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.

நேற்று மாலைதீவிற்குச் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான AI – 001 விமானத்தின் இன்று முற்பகல் நாட்டிற்கு வருகை தந்தார்.

இந்திய பிரதமருடன் 59 பேரைக் கொண்ட தூதுக்குழுவும் வருகை தந்தது.

நாட்டிற்கு வருகை தந்த பாரத பிரதமரை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

அமைச்சர் சஜித் பிரேமதாச, பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்க ஆகியோரும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின்போது, நாட்டின் பிரதிநிதியாக அமைச்சர் சஜித் பிரேமதாச செயற்பட்டார்.

இதனையடுத்து, இந்திய பிரதமரை ஏற்றிய பாதுகாப்பு வாகனங்கள் கொழும்பை நோக்கி புறப்பட்டன.

உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்விற்கு முன்னரே, ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நரேந்திர மோடி சென்றார்.

கொழும்புப் பேராயர் பேரருட்திரு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும் இதில் இணைந்துகொண்டார்.

இதனையடுத்து, கடும் மழைக்கு மத்தியில் ஜனாதிபதி செயலத்திற்கு சென்ற பாரத பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்காக இராணுவ மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் மேல் மாடியிலிருந்து, பாரத பிரதமரின் விஜயம் தொடர்பான தகவல்களை நியூஸ்பெஸ்ட் இன்று காலை முதல் நேரடியாக வழங்கியது.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குச் சென்ற இந்திய பிரதமர், இலங்கைக்கான தமது மூன்றாவது விஜயத்தை நினைவுகூரும் வகையில் மரக்கன்றொன்றையும் நாட்டினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் மதியபோசன விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

தமது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக இன்று மாலை இந்தியா நோக்கிப் புறப்பட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்