சட்டவிரோத சர்வதேச தொலைத்தொடர்பு சேவை: CID விசாரணை

நீர்கொழும்பில் சட்டவிரோத சர்வதேச தொலைத்தொடர்பு சேவை: விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பு

by Staff Writer 08-06-2019 | 3:41 PM
Colombo (News 1st) நீர்கொழும்பில் சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவையை முன்னெடுத்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சீன பிரஜை ஒருவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பு - ஏத்துகால பகுதியில் நேற்று (07) கைது செய்யப்பட்டனர். நாட்டில் தங்கியுள்ள சீன பிரஜைகள் இங்கிருந்து அவர்களுடைய நாட்டிற்கு குறைந்த விலையில் தொலைபேசி அழைப்பு சேவையை வழங்குவதற்காக சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் சேவையை முன்னெடுத்து வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு சில்வெஷ்டர் பகுதியிலுள்ள வீடொன்றை நேற்று அதிகாலை சோதனையிட்ட போது, தொடர்பாடல் கருவிகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த வீட்டிலிருந்து 402 கையடக்க தொலைபேசிகளும் 17,400 சிம் அட்டைகளும் 60 ரவுட்டர்களும் கைப்பற்றப்பட்டன. நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜை விசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.