அரசியல்வாதிகள் இன ரீதியாக நாட்டை பிளவுபடுத்துகின்றனர்: ஜனாதிபதி முல்லைத்தீவில் தெரிவிப்பு

by Staff Writer 08-06-2019 | 8:13 PM
Colombo (News 1st) நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்மார்ட் ஶ்ரீலங்கா திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். மாவட்ட செயலக வளாகத்தில் இந்த 'வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம்' அமைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கிருந்த பதிவேட்டிலும் கையெழுத்திட்டார். இந்த நிகழ்வில், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொது விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ''நாட்டிற்காக ஒன்றிணைவோம்'' தேசிய வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொண்டார். நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் நான்காவது கட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தை கேந்திரமாகக் கொண்டு கடந்த 3 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஊடாக 6 பிரதேச செயலாளர் பிரிவுகள், 136 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் 1178 திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்ததாவது,
இந்த வருட இறுதியில் இந்நாட்டில் தேர்தலொன்று நடைபெறவுள்ளது. அந்த தேர்தலை இலக்காகக் கொண்டு இன்று பலர் செயற்படுகின்றனர். நாட்டை பிளவுபடுத்தவும் அழிப்பதற்காகவுமே அடிப்படைவாதிகளும் பயங்கரவாதிகளும் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். அவர்களின் இலக்கு இலங்கையில் இன்று வெற்றியளித்துள்ளது. காரணம் இன ரீதியாக அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துகின்றனர். இது நாட்டின் அழிவாகும். முஸ்லிம் பிரபாகரனை உருவாக்க இடமளிக்க வேண்டாம்.
இந்த நிகழ்வில் மாவட்ட மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள், புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி பத்திரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.