ஜனாதிபதியின் கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் அறிக்கை மூலம் பதில்

by Staff Writer 08-06-2019 | 8:22 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமித்த பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு குறித்து நேற்று (07) தெரிவித்த கருத்திற்கு சபாநாயகர் அலுவலகம் இன்று மாலை அறிக்கையொன்றின் மூலம் பதிலளித்துள்ளது. ஜனாதிபதி செயலாளருக்கு சட்ட மா அதிபரால் அனுப்பப்பட்ட கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவுக்குழுவில் வெளியாகும் சில விடயங்கள், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தடையாக அமைவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ''அந்தக் கடிதம் தமது உத்தரவு என்றும், அதனை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்க வேண்டும் என்றும், 2019-06-07 அன்று ஜனாதிபதி ஊடகங்களுக்கு முன்பாக தெரிவித்தார். ஜனாதிபதியால் அனுப்பப்படும் மகஜர், சபைக்கும் அதற்குமுள்ள தொடர்பிற்கமைவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். தெரிவுக்குழுவின் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது அவசியமானதாகத் தென்படவில்லை.'' தற்போது காணப்படும் சட்டத்திற்கமைய, அதிகாரியொருவரை பாராளுமன்றத்திற்கு அழைத்தால் அவர் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்பதுடன், அது மீறப்படும் பட்சத்தில் எதிர்கொள்ள நேரிடும் விளைவுகள் குறித்து அறிந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.