சட்டவிரோத சர்வதேச தொலைத்தொடர்பு சேவை: மூவர் கைது

சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவையை முன்னெடுத்த சீன பிரஜை ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

by Staff Writer 07-06-2019 | 4:24 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக சர்வதேச தொலைத்தொடர்பு சேவையை முன்னெடுத்த சீன பிரஜை ஒருவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்கள் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, நீர்கொழும்பு சில்வெஷ்டர் பகுதியிலுள்ள வீடொன்றை இன்று அதிகாலை சோதனையிட்ட போது, தொடர்பாடல் கருவிகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். குறித்த வீட்டிலிருந்து 402 கையடக்க தொலைபேசிகளும் 17,400 சிம் அட்டைகளும் 60 ரவுட்டர்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சீன பிரஜை வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தொலைத்தொடர்பு சாதனைங்களை பயன்படுத்தி சர்வதேச தொலைபேசி சேவைகளை வழங்கியதனூடாக சந்தேகநபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், ஶ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தினர் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.