இரண்டாம் கட்ட அறிக்கையின் பின்னர் சட்ட நடவடிக்கை

இரணைமடு குள புனரமைப்பில் மோசடி: இரண்டாம் கட்ட அறிக்கையின் பின்னர் சட்ட நடவடிக்கை

by Staff Writer 07-06-2019 | 9:13 PM
Colombo (News 1st) இரணைமடு குள புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரண்டாம் கட்ட அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்தார். கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடு குளத்தின் புனரமைப்பின் போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனையடுத்து, இது தொடர்பில் ஆராய்வதற்காக வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மூவரடங்கிய குழு ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நியமித்தார். விசரணைக்குழுவின் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம், இரணைமடு குள புனரமைப்பின் போது மோசடி இடம்பெற்றதாக உறுதிப்படுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதலாவது அறிக்கையின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டாவது குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அறிக்கை இன்னும் ஒருவாரத்தில் கிடைக்கப்பெறும் எனவும் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். இரண்டாம் அறிக்கை கிடைக்கப் பெற்றதன் பின்னர் குள புனரமைப்பின் போது இடம்பெற்ற தவறுகள் மற்றும் அதனை யார் மேற்கொண்டார் என்ற தகவலின் பிரகாரம் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இரணைமடு குளம் புனரமைக்கப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு குளத்தின் புனரமைப்பினால் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயர்த்தப்பட்டதுடன், குளத்தின் நீர் கொள்ளளவும் விஸ்தீரனமாக்கப்பட்டது. 131 ஏக்கர் கன மீட்டர் கொள்ளளவாகக் காணப்பட்ட இரணை மடு குளத்தின் நீர் கொள்ளளவு 148 ஏக்கர் கன மீட்டர் கொள்ளளவாக விஸ்தரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.