by Staff Writer 07-06-2019 | 3:32 PM
Colombo (News 1st) தனக்கு வழங்கப்பட்டுள்ள கட்டாய விடுமுறையை இரத்து செய்து, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு கோரி பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரசன்ன ஜயவர்தன மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுவின் சில பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என சட்ட மா அதிபர் சார்பில் இன்று மன்றில் ஆஜராகிய மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் இந்திகா தேவமுனி மன்றுக்கு அறிவித்தார்.
இந்த விடயத்தை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம், அனைத்து பிரதிவாதிகளுக்கும் மீண்டும் பதிவுத் தபாலில் அறிவித்தலை அனுப்புமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
குறித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதியின் பின்னர் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வற்கான கட்டளையை பிறப்பிக்குமாறும் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், தமது தரப்பினரின் கோரிக்கை அத்தியாவசியமானதொன்று என்பதால் அது தொடர்பான மனுவை விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என மனுதாரரான பூஜித் ஜயசுந்தர சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி விரான் கொரயா கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைய, இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் குறித்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 24 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.