அர்ஜுன மகேந்திரன் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக வழக்குத் தொடர சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி கோரல்

by Staff Writer 07-06-2019 | 4:14 PM
Colombo (News 1st) முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் ஜோசப் ஆலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் மாகாண நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து, வழக்குத் தொடர்வதற்கு பிரதம நீதியரசரிடம் சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. இந்த வழக்கின் தன்மை, சர்ச்சை மற்றும் இடம்பெற்ற ஊழலால் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டிருப்பதைக் கவனத்திற்கொண்டு வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிரோஷா ஜயரத்ன தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற முறிகள் ஏலத்தின் போது 10,058 பில்லியன் ரூபா திறைசேரி முறிகளை மோசடியான முறையில் கையாண்டமை தொடர்பில் பொதுச்சொத்துக்கள் கட்டளைச் சட்டத்தின் 5/1 பிரிவிற்கமைய அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. திறைசேரி 10,058 பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகிக்கும்போது, 688 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் அர்ஜூன மகேந்திரன் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்படவுள்ளது. குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்ட மா அதிபரால் அனுமதி கோரப்பட்டுள்ளது. அர்ஜுன் மகேந்திரன், பத்தினிகே சமரசிறி, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம், அர்ஜூன் ஜோசப் அலோசியஸ், கசுன் பாலிசேன, ஜெஃப்ரி ஜோசப் அலோசியஸ், டி.மித்ரா குணவர்தன, சி.ரஞ்சன் ஹூலுகல்ல, முத்துராஜா சுரேந்திரன் மற்றும் ஆஜான் புஞ்சிஹேவா ஆகியோருக்கு எதிராகவே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.