மக்கள் சக்தி திட்டத்தின் ஆய்வறிக்கை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு கையளிப்பு

by Staff Writer 06-06-2019 | 9:02 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி திட்டத்தின் எண்ணக்கரு மீண்டும் ஒருமுறை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட மக்கள் சக்தி திட்டத்தின் ஆய்வு அறிக்கை ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் நூலகத்திற்கு கையளிக்கப்பட்டது. கிராமங்கள் தோறும், இல்லங்கள் தோறும் சென்று ஆராயப்பட்டு தீர்வு வழங்கப்பட்ட மக்கள் சக்தி திட்ட ஆய்வு அறிக்கை ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக மனிதாபிமான மாநாடு உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, மக்கள் சக்தி செயற்றிட்டம் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் என அமெரிக்காவின் பிரவுன்ஸ் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் மக்கள் சக்தி திட்ட அறிக்கை இங்கிலாந்தில் அமைந்துள்ள ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக நூலகத்திற்கு கையளிக்கப்பட்டது. வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் அங்கமான ஜோன்ஸ் டீ நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஷமீர் ரசூல்தீனினால் இந்த ஆய்வறிக்கை பல்கலைக்கழகத்தில் கையளிக்கப்பட்டது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கரல் சூடர் மற்றும் ஜோன் ரிச்சட் ஆகியோர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.