பெருந்தோட்ட மாணவர்களின் கல்விக்கான விசேட திட்டம்

பெருந்தோட்ட மாணவர்களின் கல்விக்கான விசேட திட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 06-06-2019 | 8:53 AM
Colombo (News 1st) பெருந்தோட்ட மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பெருந்தோட்டங்களிலுள்ள பாடசாலைகளில் தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், பெருந்தோட்டப் பாடசாலைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமையின் காரணமாக இந்த மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் சிக்கல் நிலவுகின்றது. பெருந்தோட்டங்களிலுள்ள பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் கீழ் தோட்டங்களுக்கு அருகாமையில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலை கட்டடங்களைப் புனரமைத்தல், வகுப்பறை வசதி, இயற்கை கழிவறை வசதி, குடிநீர் வசதி, பாடசாலை உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.