சுற்றுலா விசாவில் வருவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி

சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருவோரின் எண்ணிக்கையில் 63 வீத வீழ்ச்சி

by Staff Writer 06-06-2019 | 9:21 PM
Colombo (News 1st) உண்மைக்கு புறம்பான செய்தி என கூறி, சட்டத்தை தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகள், மக்களுக்கு வழங்கும் பொய்யான வாக்குறுதிகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியதில்லையா? இந்த அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை மக்களுக்கு சுட்டிக்காட்டுவதன் காரணமாகவா, உண்மைக்கு புறம்பான செய்திகள் எனக்கூறி ஊடகங்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள்? அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளுக்கு சுற்றுலாத்துறை அண்மித்த உதாரணமாகும். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறைக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட நிவாரணங்கள் இதுவரையில் வழங்கப்படவில்லை. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், உலகின் முக்கிய நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பயங்கரவாதத் தாக்குதலினால் சுற்றுலாத்துறை அதிகளவில் பாதிக்கப்பட்ட இந்த வருடத்தின் மே மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் புள்ளிவிபரங்களை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இதுவரையில் வௌியிடவில்லை. எனினும், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தௌிவாகக் காணக்கூடியதாகவுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சுற்றுலா விசா ஊடாக நாட்டிற்கு 187,235 பேர் வருகை தந்துள்ளதுடன், இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் அந்த எண்ணிக்கை 173, 297 பேராகக் குறைவடைந்துள்ளது. எனினும், கடந்த வருடம் மே மாதம் சுற்றுலா விசா ஊடாக நாட்டிற்கு 150, 495 பேர் வருகை தந்துள்ளதுடன், இந்த வருடம் மே மாதம் அந்த எண்ணிக்கை 55 ,771 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 63 வீத வீழ்ச்சியாகும். எவ்வாறாயினும், சுற்றுலாத்துறையின் எதிர்காலத்திற்காக நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டது. எனினும், இந்த நிவாரணம் சுற்றுலாத்துறையிலுள்ளவர்களுக்கு கிடைத்ததா?