மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளில் இருந்து ஜப்பான் நிறுவனம் விலகும் அபாயம்

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளில் இருந்து ஜப்பான் நிறுவனம் விலகும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 8:42 pm

Colombo (News 1st) மத்திய அதிவேக வீதி தொடர்பில் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது.

வீதியின் நான்காவது கட்டத்தை கஷுபா என்ற சீன நிறுவனத்திடம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

நான்காவது கட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்த போதிலும், அதிவேக வீதியின் முதலாவது மற்றும் மூன்றாவது கட்டங்களின் நிர்மாணப் பணிகள் தற்போது பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளன.

மத்திய அதிவேக வீதியின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்துள்ளன.

கடவத்தை முதல் மீரிகம வரை முதலாவது கட்டமும், மீரிகமவில் இருந்து குருநாகல் வரை இரண்டாவது கட்டமும் பொத்துஹெரவில் இருந்து கலகெதர வரை மூன்றாவது கட்டமும் தனித்தனியாக நிர்மாணிக்கப்படுவதே அடிப்படைத் திட்டமாகும்.

மத்திய அதிவேக வீதியின் நான்காவது கட்டத்தை குருநாகலில் இருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இரு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய, கடவத்தையில் இருந்து மீரிகம வரையான முதற்கட்டத்தின் நிர்மாணப்பணிகளை சீனாவிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

எனினும், அதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து எதிர்பார்த்த கடன் இதுவரையில் கிடைக்கவில்லை.

ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், அதனை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் 15 வீத முற்பணத்தை செலுத்த வேண்டிய நிலை இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அந்த நிதியை செலுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டது.

முதலாவது கட்டம் தொடர்ந்தும் தாமதமடைந்துள்ள நிலையில், மத்திய அதிவேக வீதியின் நான்காம் கட்டத்தை சீன நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டு வங்கிகள் சிலவற்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடனுதவியின் கீழ், மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாணப்பணிகள் உள்நாட்டின் சில நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது.

மீரிகமவில் இருந்து குருநாகல் வரையான இந்த பகுதியின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகின்ற போதிலும், அதிலும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

பொத்துஹெர நுழைவாயிலின் நிர்மாணப்பணிகளில் ஏற்பட்ட பிரச்சினையே இதற்கு காரணமாகும்.

இந்த நுழைவாயில் மூன்றாம் கட்ட நிர்மாணப்பணிகளுக்குள்ளேயே அடங்குகின்றது.

அதற்கமைய, ஜப்பானின் Taisei நிறுவனத்திடமே அந்த நிர்மாணப்பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

எனினும், துரிதமாக பொத்துஹெர நுழைவாயிலை நிர்மாணிப்பதற்கான தேவை காணப்படுவதால், இரண்டாம் கட்டத்தின் கீழ் இதனை முன்னெடுப்பதற்கான பிரேரணையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

அந்த செயற்பாடு இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ள நிலையில், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கபீர் ஹசீம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதேவேளை, பொத்துஹெர நுழைவாயிலை மூன்றாம் கட்டத்தில் இருந்து நீக்கி, இலங்கை அரசாங்கம் பொறுப்பேற்றால், திட்டத்தில் இருந்து விலகுவதாக ஜப்பானின் Taisei நிறுவனம் எச்சரித்துள்ளது.

மூன்றாம் கட்டத்தின் கீழ் இந்த நுழைவாயிலை நிர்மாணித்தால், இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்ய மேலும் இரண்டு வருடங்கள் தேவைப்படும்.

அதற்கமைய, மத்திய அதிவேக வீதியின் முதலாவது மற்றும் மூன்றாவது கட்டங்கள் தற்போது பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்