தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டி: இந்தியா வெற்றி

தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி

by Staff Writer 06-06-2019 | 6:50 AM
Colombo (News 1st) இந்தத் தடவை உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. சதம்ப்ட்டனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் பின்தங்கிய நிலையிலேயே தென்னாபிரிக்க அணி நெருக்கடியுடன் களமிறங்கியது. ஆரம்பம் முதலே, தென்னாபிரிக்க அணி இந்திய பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்குத் தடுமாறியது. இதனையடுத்து, தென்னாபிரிக்க அணி 20 ஓவருக்குள் 4 விக்கெட்களை பறிகொடுத்ததுடன், 100 ஓட்டங்களைப் பெறுவதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. கிறிஸ் மோரிஸ், ரபாடா ஜோடி நிதானமாக துடுப்பெடுத்தாடி, அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக யுவேந்திர சாஹல் 60 பந்துகளில் 51 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 1983ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இந்தியா வெற்றிகொண்ட சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதைப் போன்று இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர்கள் 5 விக்கெட்களை எடுத்துள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெற்றியிலக்கை நோக்கிய பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கைக் கடந்தது. 2019 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முதல் சதத்தை ரோஹித் ஷர்மா பெற்றுக் கொண்டார். இரண்டு சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்ரிகளுடன் 122 ஓட்டங்களைக் குவித்து ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தார். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் 8 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள அணியின் தலைவர் விராட் கோலி 18 ஓட்டங்களை பெற்ற நிலையில், மகேந்திர சிங் தோனி 34 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது. இதேவேளை, நேற்று நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 47.1 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றுள்ளது இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து புள்ளிகள் பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடத்திலுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.