ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மனுக்களை 7 பேர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரிக்க தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மனுக்களை 7 பேர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரிக்க தீர்மானம்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான மனுக்களை 7 பேர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரிக்க தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

06 Jun, 2019 | 7:54 pm

Colombo (News 1st)  ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் 7 பேர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் விசாரிப்பதற்கு பிரதம நீதியரசர் தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்தது.

தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் மா அதிபருக்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் அறிவித்திருந்த போதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தையான வெல்லம்பிட்டிய – வென்னவத்தை பகுதியைச் சேர்ந்த சமன் நந்தன சிரிமான்ன, சுற்றுலா விடுதி வர்த்தகரான ஜனக் எஸ்.விதானகே மற்றும் நாகானந்த கொடித்துவக்கு ஆகியோருடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மூவர் வெவ்வேறாக அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

புவனெக அளுவிகாரே, சிசிர டி ஆப்ரூ மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகியோர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சாட்சியங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி அனைத்து மனுக்களும் 7 பேர் கொண்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளதாக இதன்போது அறிவிக்கப்பட்டது.

வழங்க வேண்டிய ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், ஆட்சேபனை இருப்பின் அன்றிலிருந்து இரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.

பிரதிவாதிகள் தரப்பின் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் பதில் ஆட்சேபனையை சமர்ப்பிக்குமாறு, மனுதாரர்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்