அவுஸ்திரேலியாவின் ABC செய்திநிறுவனம் சுற்றிவளைப்பு

அவுஸ்திரேலியாவின் ABC செய்தி நிறுவனம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

by Staff Writer 05-06-2019 | 1:09 PM
Colombo (News 1st) ABC (Australian Broadcasting Corp) என அழைக்கப்படும் அவுஸ்திரேலிய செய்தி நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர். குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் கவென் மொரிஸ் (Gaven Morris) மற்றும் இரு ஊடகவியலாளர்களின் பெயர்களில் குறித்த சோதனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அவுஸ்திரேலிய படையினரின் நடத்தை குறித்து தவறாகத் தொகுக்கப்பட்ட செய்தி தொடர்பில் பொலிஸார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வியடம் தொடர்பான தகவல்கள் வௌியாகியதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரின் வீட்டிலும் நேற்றைய தினம் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஆப்கனில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களை மையப்படுத்தி வௌியிடப்பட்ட குறித்த அறிக்கை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், ஊடகவியலாளரின் வீடு மற்றும் ABC நிறுவனத்தின் தலைமைக் காரியாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை என பெடரல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2017ஆம் ஆண்டு செய்தி நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ள 'ஆப்கன் பைல்ஸ்' எனும் தொகுப்பில் இராணுவம் சம்பந்தப்பட்ட இரகசியத் தகவல்கள் வௌிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.