ஆசனங்கள் ஒதுக்குவதில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன

முஸ்லிம் பிரதிநிதிகளின் இராஜினாமா கடிதங்கள் கிடைக்கவில்லை: படைக்கல சேவிதர்

by Staff Writer 05-06-2019 | 6:45 PM
Colombo (News 1st) முஸ்லிம் பிரதிநிதிகள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளமையால், பாராளுமன்ற சபையில் ஆசனங்களை ஒதுக்குவதில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளன. அமைச்சு பதவிகளில் உள்ளவர்கள் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியூடாக சபாநாயகருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். குறித்த கடிதம் கிடைத்ததன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என படைக்கல சேவிதர் குறிப்பிட்டார். இதேவேளை, முன்னாள் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த முன்வரிசை ஆசனங்களை அவர்களுக்கு மீண்டும் ஒதுக்குவது தொடர்பில் நேற்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிமிற்கும், ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த ஆசனத்தை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பான கடிதம் ஜனாதிபதியூடாக இதுவரை சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.